புயல் எச்சரிக்கை.. இன்று 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயல் சின்னம் காரணமாக, வடகிழக்குப் பருவமழை தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை மிரட்டி வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இன்று 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இன்று நவம்பர் 24ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் அதே திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி (நெல்லை), தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது:
இன்று கனமழை எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக, இன்று திருநெல்வேலி (நெல்லை), தென்காசி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் முதல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை மாவட்டம் நாலு மூக்கில் 25.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வெள்ளப் பெருக்கு: மணிமுத்தாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், கடலோரப் பகுதியினர் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!