சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு பை..பை... மங்களூரு வந்தடைந்த 16,000 டன் எரிவாயு கப்பல்!

 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் புதிய மங்களூரு துறைமுகத்திற்கு 'அப்பல்லோ ஓஷன்' (Apollo Ocean) என்ற பிரம்மாண்ட கார்கோ கப்பல் வந்து சேர்ந்துள்ளது. வியட்நாம் நாட்டு கொடியுடன் வந்த இந்த கப்பல், சுமார் 16,000 மெட்ரிக் டன் எடையுள்ள திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவை (LPG) ஏற்றி வந்துள்ளது. நேற்று இரவு 8 மணி அளவில் துறைமுகத்திற்கு வந்த இந்தக் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த 'சிவாலிக்' என்ற தாய் கப்பலில் இருந்து இந்த எரிவாயு மாற்றப்பட்டு, சிறிய கப்பலான அப்பல்லோ ஓஷன் மூலம் மங்களூருவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் போர் மூண்டுள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் தாண்டி எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாக வந்து கொண்டிருப்பது நாட்டு மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மங்களூருவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய நிலத்தடி எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு இந்த எரிவாயு கொண்டு செல்லப்படுவதால், தென் மாநிலங்களில் நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் வரத்தைக் கருத்தில் கொண்டு, மார்ச் 14 முதல் மார்ச் 31 வரை கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு வரும் கப்பல்களுக்கான கட்டணத்தை மங்களூரு துறைமுக நிர்வாகம் முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் மேலும் 4 எரிவாயு கப்பல்கள் மங்களூரு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டருக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!