செத்து 10 நாளாச்சு.. அவர் தூங்கறாரு... எங்கள பிரிச்சிடாதீங்க... அழுகிய உடலுடன் பாசப்போராட்டம்... கதறும் மனைவி!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே உள்ள கொட்டிகே ஹாரா பகுதியில், கணவன் - மனைவி பாசத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான சிரில் மோனிஸ் என்பவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களது மகன் பெங்களூருவிலும், மகள் துபாயிலும் வேலை பார்த்து வரும் நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை சிரில் மோனிஸ் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்துள்ளார்.
வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சிரில் மோனிஸ், கடந்த 10 நாட்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளார். ஆனால், கணவர் இறந்தது கூடத் தெரியாமல், அவர் தூங்கிக்கொண்டிருப்பதாக எண்ணிய அவரது மனைவி, 10 நாட்களாக அழுகிய உடலுடனேயே வாழ்ந்து வந்துள்ளார். மகன் போனில் அழைக்கும் போதெல்லாம், "அப்பா நல்லா இருக்காரு, தூங்குறாரு" என்று கூறி வந்துள்ளார். உடல் அழுகி, புழுக்கள் நெளிந்து, வீடு முழுவதும் துர்நாற்றம் வீசிய நிலையிலும், அந்தப் பெண் தனது கணவரைப் பிரிய மனமில்லாமல் அருகிலேயே அமர்ந்திருந்தது காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது.
துர்நாற்றம் தாங்க முடியாமல் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் வந்து உடலை மீட்க முயன்றபோதுதான் அந்தப் பாசப்போராட்டம் அரங்கேறியது. "என் கணவர் தூங்குறாரு, அவரைத் தொடாதீங்க.. எங்களைப் பிரிச்சிடாதீங்க" என அந்தப் பெண் கதறி அழுது போலீசாரைத் தடுத்த விதம் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. ஒருவழியாகச் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கணவர் மறைந்தது கூடத் தெரியாமல் ஒரு பெண் நடத்திய இந்தப் பாசப்போராட்டம், அப்பகுதி மக்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!