ஹாங்காங் தீவிபத்து உயிரிழப்பு 156-ஆக உயர்வு - 31 பேர் மாயம்!
ஹாங்காங்கின் தை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு மேலும் 5 உடல்களை மீட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் இன்னும் 31 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சில உடல்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் ஹாங்காங் மக்களைக் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எட்டு குடியிருப்பு கோபுரங்களைக் கொண்ட அந்தக் குடியிருப்பு வளாகத்தில் கடந்த வாரம் (நவம்பர் 26) இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏழு கோபுரங்கள் முழுவதுமாக சேதமடைந்தன.
அந்தக் கட்டிடங்களில் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பழைய பாணியில் அமைக்கப்பட்ட மூங்கில் சாரங்களையும் மற்றும் தரமற்ற, எளிதில் தீப்பற்றக்கூடிய மறைப்பு வலைகளையும் பயன்படுத்தியதே நெருப்பு மிக வேகமாகப் பரவி, இவ்வளவு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தக் கோர விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் கள மேலாளர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!