குஷ்பு குறித்து அவதூறு பேச்சு... திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு சுந்தர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பிறகு இன்று இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் ஆகியோரை மிகவும் ஆபாசமாகவும், இழிவாகவும் பேசி விமர்சித்ததாகப் புகார் எழுந்தது.
குஷ்பு சுந்தர் மற்றும் ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், கொளத்தூர் மற்றும் கொடுங்கையூர் போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவரது பேச்சால் கடும் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இவரைப் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கினார். இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்ற வளாகத்திலேயே காவலில் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே ஆளுநர் மாளிகை தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த காலங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த இவருக்கு, இந்த 3 ஆண்டு சிறை தண்டனை மிகப்பெரிய சட்ட ரீதியான பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம், பொது மேடைகளில் பெண்களை இழிவுபடுத்திப் பேசுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!