விவாகரத்து பெற்று கண்ணீருடன் சென்ற மகள்.. மேளதாளத்துடன் வீட்டுக்குள் அழைத்த நீதிபதி தந்தை... விநோத வீடியோ!
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், விவாகரத்து பெற்று வீடு திரும்பிய மகளை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் செயல், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மாவின் மகள் பிரணிதாவிற்கும், ராணுவ மேஜர் ஒருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் உள்ள நிலையில், கணவர் வீட்டில் பிரணிதா தொடர் உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இனியும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த பிரணிதா, மீரட் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நேற்று முன்தினம் அவருக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்தது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து பிரணிதா வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த அவரது உறவினர்கள் மேளதாளங்கள் முழங்க, நடனமாடி அவரை உற்சாகமாக வரவேற்றனர். பொதுவாக விவாகரத்து என்பது ஒரு சோகமான நிகழ்வாகப் பார்க்கப்படும் நிலையில், "பெண் அடிமைத்தனத்தில் இருந்து எனது மகள் விடுதலை பெற்றுவிட்டாள்" என்பதைக் குறிக்கும் விதமாக இந்த வினோதக் கொண்டாட்டம் அரங்கேறியது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 'நான் என் மகளை நேசிக்கிறேன்' (I Love My Daughter) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கருப்பு நிற டீ-சர்ட் அணிந்து வந்து மகளுக்குப் பின்பலமாக நின்றனர். தந்தை ஞானேந்திர குமார் சர்மா தனது மகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்ற காட்சி அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.
"திருமண வாழ்வில் மகள் மகிழ்ச்சியாக இல்லையென்றால், அந்த நரகத்தில் இருந்து அவளை மீட்பதே ஒரு தந்தையின் கடமை" என்று நீதிபதி ஞானேந்திர குமார் உருக்கமாகத் தெரிவித்தார். சமூகத்தின் தேவையற்ற எதிர்பார்ப்புகளைவிட மகளின் கண்ணியமும் மகிழ்ச்சியுமே தமக்கு முக்கியம் என்றும், யாரிடமும் ஜீவனாம்சம் கோரவில்லை என்றும் அவர் உறுதியுடன் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்கள் மௌனமாக அநீதியைச் சகித்துக் கொள்ளாமல், தமக்காகத் தாமே எழுந்து நிற்க வேண்டும் என்று பிரணிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!