"இனி விசில் ஊதக் கூடாது" - சொந்தச் செலவில் ஸ்பீக்கர் வாங்கித் தந்த திமுக கவுன்சிலர்!
ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் பொதுமக்களை அழைக்க வழக்கமாக விசில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இது மாற்றப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் சின்னமாக 'விசில்' ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், குப்பை வண்டிகளில் விசில் ஊதுவது தவெக-விற்குச் செய்யும் விளம்பரமாக அமைந்துவிடுமோ என்ற அரசியல் கணக்கு இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை நகராட்சியின் 25-வது வார்டு திமுக கவுன்சிலர் குமார், தனது வார்டில் இயங்கும் குப்பை வண்டிகளுக்குச் சொந்தச் செலவில் ஒலிபெருக்கிகளை வழங்கியுள்ளார்: தூய்மைப் பணியாளர்கள் இனி விசில் ஊதத் தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக இந்த ஒலிபெருக்கிகளில் பாடல் அல்லது அறிவிப்புகளை ஒலிக்கச் செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் மத்தியில் 'விசில்' சத்தம் தவெக-வை நினைவுபடுத்துவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு எனப் பரவலாகப் பேசப்படுகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
"எங்கள் சின்னத்தைக் கண்டு ஆளுங்கட்சி எந்த அளவிற்குப் பயப்படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி" எனத் தவெக தொண்டர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இது வெறும் வார்டு மேம்பாட்டிற்காகச் செய்யப்பட்ட மாற்றம் என்றும், சத்தமில்லாமல் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாணாவரம் பகுதியில் தவெக நிர்வாகிகளிடம் திமுக கவுன்சிலர் ஒருவர் "இனி விசில் சத்தம் கேட்கக் கூடாது" என மிரட்டிய வீடியோ வைரலான நிலையில், தற்போது இந்த ஒலிபெருக்கி வழங்கும் விவகாரம் அரசியல் களத்தில் 'விசில்' சத்தத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!