திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை விறுவிறுப்பாக முடித்து வருகிறது. 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் திமுக, இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தனது ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டுத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்த முறை ஒரு இடம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மு. வீரபாண்டியன் மற்றும் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நான்கு கட்டங்களாக நடைபெற்ற நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட உள்ளது.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவிற்கு 4 தொகுதிகளும், ஐயுஎம்எல், மமக மற்றும் கொமதேக ஆகிய கட்சிகளுக்குத் தலா 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 43 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இன்னும் விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மார்ச் 22ம் தேதிக்குள் அனைத்துக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டு, முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!