தடுப்பூசி போட்டும் பலனில்லை... நாய்க்கடியால் 8 வயது சிறுவன் 15 மாதங்கள் போராடி உயிரிழப்பு... கதறும் பெற்றோர்கள்!
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில் தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன், சுமார் 15 மாதங்களாக மரணத்துடன் போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனைத் தெருநாய் ஒன்று கொடூரமாகக் கடித்துள்ளது. காயமடைந்த சிறுவனுக்கு உடனடியாகத் தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், நாய்க்கடியின் பாதிப்பு அவரது நரம்பு மண்டலத்தைத் தீவிரமாகத் தாக்கியதால் உடல்நிலை மோசமடைந்தது. இந்தத் தகவல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு முன்னணி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்கள் தொடர்ந்து போராடியும், சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று காலை அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். துள்ளித் திரிந்த சிறுவன் கண்முன்னே வாடி வதங்கி உயிர் பிரிந்ததைக் கண்டு அவனது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.
தடுப்பூசி செலுத்திய பின்னரும் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம், தெருநாய்கள் குறித்த அச்சத்தை மக்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளது. நாய்க்கடி ஏற்பட்டால் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் தரம் குறித்துச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜகித்யாலா மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு பிஞ்சு உயிர் நாய்க்கடியால் பறிபோனது தெலங்கானா மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!