மதுரையில் டிச.17ல் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் அடிப்படை வசதிச் சீர்கேடுகளைக் கண்டித்து, அதிமுக சார்பில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி (புதன்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அறிக்கையில் திமுக அரசு மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மீது எடப்பாடி பழனிசாமி பல முக்கியக் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்:
புதிய திட்டங்கள் இல்லை: தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 55 மாதங்களாக மதுரை மாநகரில் அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறு எந்தப் புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. மதுரை மெட்ரோ இரயில் திட்ட முன்மொழிவைக்கூட முழுமையாக வழங்கவில்லை.
வரி உயர்வும் ஊழலும்: வீடுகளுக்கு 100% வரி உயர்வு, வணிக நிறுவனங்களுக்கு 150% வரி உயர்வு, குடிநீர் மற்றும் குப்பை வரிக்கான கட்டண உயர்வு ஆகியவற்றால் வருவாய் பலமடங்கு உயர்ந்தும், ரூ. 200 கோடி ஊழல் நடந்துள்ளதாக அரசு அதிகாரிகளே அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஊழலில் ஈடுபட்ட தி.மு.க. மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்ததைத் தவிர, மற்றவர்கள் மீது நடவடிக்கை இல்லை.
அடிப்படை வசதி சீர்கேடு: வரி வருவாய் அதிகரித்தும், மதுரை மாநகரில் அனைத்து வார்டுகளிலும் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன; கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.
குடிநீர் திட்டம் தோல்வி: அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், அவசர கதியில் தொடங்கி வைக்கப்பட்டதால், 24 மணி நேரம் குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டும், இன்றும் பழையபடி குறிப்பிட்ட நேரங்களுக்கே குடிநீர் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளும் முழுமையாக வழங்கப்படவில்லை.
மதுரை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் மற்றும் மக்கள் நலப் பணிகளைக் கண்டுகொள்ளாத தி.மு.க. அரசைக் கண்டித்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 17ம் தேதி காலை 10 மணிக்கு பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெறுகிறது. மாநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் ராஜன் செல்லப்பா (முன்னாள் அமைச்சர் மற்றும் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்)
இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!