10ம் வகுப்பு தேர்வு நாளில் தேர்தல் பயிற்சி? ஆசிரியர்கள் குழப்பம்!
தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபடும் சுமார் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மூன்று கட்டங்களாகப் பயிற்சி அளிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினம்தான் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதி நாள் என்பதால், ஆசிரியர்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். தேர்வுப் பணியில் இருக்க வேண்டிய ஆசிரியர்களை அதே நாளில் தேர்தல் பயிற்சிக்கும் அழைத்திருப்பது நிர்வாகக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் 2ம் தேதி 10ம் வகுப்புத் தேர்வு முடிவடையும் நிலையில், ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்புப் பணிகளில் தீவிரமாக இருப்பார்கள். அதே நேரத்தில் தேர்தல் பயிற்சியிலும் பங்கேற்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று என ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. மேலும், அன்றைய தினம் 'பெரிய வியாழன்' என்பதால், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாலையில் தேவாலயங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதனால் அன்றைய தினத்தில் பயிற்சியை வைப்பது தங்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு மற்றும் மத வழிபாட்டு நாட்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த மாதம் 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பயிற்சித் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வேண்டிய ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அவசியம் என்றாலும், மற்ற முக்கியப் பணிகளோடு இது மோதாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஆசிரியர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் ஆணையம் தேதியை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!