ஆளும் கட்சி அரசு இயந்திரத்தை பயன்படுத்த தடை... தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகள்!
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தந்தப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இது தொடர்பாக மத்திய அமைச்சரவைச் செயலாளர் மற்றும் மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அமைச்சர்கள் தங்களின் அதிகாரப்பூர்வப் பயணங்களுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகளை எக்காரணம் கொண்டும் இணைக்கக் கூடாது என்று ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான வாகனங்கள், விமானங்கள் மற்றும் அரசுப் பணியாளர்களைத் தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானங்கள் போன்ற பொது இடங்களைப் பயன்படுத்துவதில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அரசு விருந்தினர் இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகளைப் பயன்படுத்துவதில் யாருக்கும் முன்னுரிமை அளிக்கப்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. உயர்மட்டப் பாதுகாப்புப் பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு அனுமதி பெற்றுத் தங்கும் வசதிகள் சமமான அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இத்தகைய விடுதிகளில் தங்கும் நபர்கள் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளை மற்றவர்கள் எவரும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதையும் ஆளும் கட்சியினர் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு நிதியைப் பயன்படுத்தி எந்தவொரு அரசியல் செய்திகளுக்கும் சார்புத்தன்மையுடன் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நேரம் முதலே அமைச்சர்கள் தங்களின் விருப்ப நிதியிலிருந்து எந்தவிதமான பணப் பட்டுவாடாக்களையும் செய்யக் கூடாது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோ அல்லது சாலை மற்றும் குடிநீர் வசதி போன்ற புதிய வாக்குறுதிகளை அளிப்பதோ சட்டப்படி குற்றமாகும். அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வாக்காளர்களைக் கவரும் வகையில் தற்காலிகப் பணியிட நியமனங்களை மேற்கொள்ளவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அச்சு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அரசு விளம்பரங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவுகளால் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறுவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!