பொதுமக்களே உஷார்... ரூ50000க்கு மேல் நகை மற்றும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள்... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் மிகவும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பொதுமக்கள் தங்களின் கையில் ரூ 50000க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதற்குத் தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி ரூ50000க்கும் மேலாகப் பணம் கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டால் அந்தப் பணம் உடனடியாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் நேரத்தில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் அல்லது அவசரத் தேவைகளுக்காகப் பணம் கொண்டு செல்லும்போது அதற்குரிய முறையான ரசீதுகளை வைத்திருக்க வேண்டும்.
பணத்தைப் போலவே புதிய பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பல்வேறு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.ரூ 10000 க்கு மேல் மதிப்புள்ள புதிய ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது பரிசுப் பொருட்களைக் கொண்டு சென்றாலும் அதற்குரிய ரசீதுகள் கட்டாயம் தேவை. திருமணத் தேவைகளுக்காக அதிக அளவில் நகைகள் அல்லது உடைகள் கொண்டு செல்வோரும் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை இருபத்தி நான்கு மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் நடத்தப்படும் சோதனைகளில் முறையான விளக்கம் அளிக்காத நபர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ரூ50000க்கு மேல் பணம் கண்டறியப்பட்டால் அவை எந்தவித முன்னறிவிப்புமின்றி உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். ரூ10லட்சத்துக்கும் மேலாகப் பணம் சிக்கினால் அது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் மேலதிக விசாரணை நடத்தப்படும். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க மாவட்ட வாரியாகக் குறைதீர்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முறையான ஆவணங்கள் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்து அக்குழுவிடம் முறையிட்டுத் தங்களின் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தேர்தல் முடியும் வரை நடைமுறையில் இருக்கும் இந்தச் சட்டதிட்டங்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!