பூம்புகாரில் மீனவ கிராமங்களில் துர்கா ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மீனவ மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார்.
பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நிவேதா எம். முருகன்-ஐ ஆதரித்து, துர்கா ஸ்டாலின் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட வானகிரி, சின்னமேடு, சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு கடலோர மீனவ கிராமங்களுக்கு அவர் நேரில் சென்றார்.
மீனவப் பெண்களையும், பெரியவர்களையும் நேரில் சந்தித்த அவர், அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார். “உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, மீண்டும் திமுக அரசு அமைய நீங்கள் அனைவரும் உறுதியான ஆதரவை வழங்க வேண்டும்,” என அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று சீர்காழி தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்த நிலையில், இன்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பூம்புகார் தொகுதியில் களமிறங்கியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரசாரத்தின் போது திமுக முக்கிய நிர்வாகிகள், மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடன் இருந்தனர். சாதாரண உடையில், எளிமையாக மக்களிடம் வாக்கு சேகரித்த துர்கா ஸ்டாலினுக்கு மீனவ கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!