தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் 'வாடகை எலக்ட்ரிக் பைக்' வசதி! - கட்டணம் எவ்வளவு?!
சென்னை உள்ளிட்டப் பெரிய நகரங்களில் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில், ரயில் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, 'வாடகை எலக்ட்ரிக் பைக்' (Rental Electric Bike) வசதியை அறிமுகப்படுத்தத் தெற்கு ரயில்வே அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் இந்தச் சேவை விரைவில் விரிவாக்கப்பட உள்ளது.
சென்னை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே, தமிழகம், கேரளா உள்ளிட்டப் பகுதிகளில் தினசரி 1,000-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. பயணிகளுக்குப் புதிய வசதிகளை வழங்குவதில் தெற்கு ரயில்வே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், கேரளா மாநிலம் பாலக்காடு கோட்டத்தில் உள்ள கோழிக்கோடு ரயில் நிலையத்தில் முதல் முறையாக இந்த 'வாடகை எலக்ட்ரிக் பைக்' வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வசதியை மற்ற முக்கிய ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தத் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் இது குறித்துத் தெரிவித்ததாவது, “கோழிக்கோட்டில் இந்த சேவைக்கு ஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய், 12 மணி நேரத்துக்கு 500 ரூபாய், 24 மணி நேரத்துக்கு 750 ரூபாய் என வாடகைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை, சேலம், திருச்சி, மதுரை கோட்டங்கள் உட்பட முக்கியமான ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்போடு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
பயணிகளின் எண்ணிக்கை, இடம் அளவு மற்றும் ஒப்பந்ததாரர்கள் தேர்வு ஆகியவற்றுக்குப் பின்னரே, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் ரயில் நிலையங்களின் பட்டியல் இறுதி செய்யப்படும்” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!