"இந்தியர்களின் திறமையால் அமெரிக்கா பயனடைந்திருக்கிறது” - குடியேற்றக் கொள்கை குறித்து எலான் மஸ்க்!
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், உலகப் பணக்காரருமான எலான் மஸ்க், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை, இந்தியத் திறமை மற்றும் தொழில்முனைவு குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் குடியேற்றம் குறித்துப் பேசிய எலான் மஸ்க், இந்தியர்களின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டியுள்ளார்: "அமெரிக்காவில் குடியேறிய திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது. இந்தியத் திறமையின் மிகப்பெரிய பயனாளியாக அமெரிக்கா இருந்துள்ளது." வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் அமெரிக்கக் குடிமக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய அவர், திறமைசாலிகளுக்கு எப்போதுமே பற்றாக்குறை இருந்து வருவதாகவும், அந்த வெற்றிடத்தை வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் நிரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
"எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை நாங்கள் உலகில் உள்ள திறமைசாலிகளைக் கண்டறிந்து பயன்படுத்த விரும்புகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எலான் மஸ்க், தனது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், தனது மகனுக்கு சேகர் எனப் பெயரிட்டுள்ளதாகவும் முன்னதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் முற்றிலும் இல்லாமல் இருந்ததாக விமர்சித்த எலான் மஸ்க், எல்லைக் கட்டுப்பாடு இல்லாவிட்டால் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்து அதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவு குறித்துப் பேசிய எலான் மஸ்க், பெரிதாகச் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு அறிவுரைகளையும் மரியாதையையும் வழங்கினார்:
தொழில்முனைவோர் எப்போதும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், தோல்விகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். "சமூகத்திற்குப் பயன் தரும் வகையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடல் இருப்பது சிறந்தது. நீங்கள் மகிழ்ச்சியை நேரடியாகத் தேட முடியாது. உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களைத் தேடிச் செல்லும்போது மகிழ்ச்சி தானாக வரும். அதேபோல், நேரடியாகப் பணத்தைத் தேடிச் செல்வதை விட, சமூக பயன்பாட்டிற்கான பொருட்கள் அல்லது சேவைகளை உருவாக்கும் போது அதில் வருமானமும் தானாக வரும்." எலான் மஸ்க்கின் இந்த ஆழமான கருத்துகள், தொழில்முனைவோர் மற்றும் திறமைசாலிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!