சர்வதேச டென்னிஸ் போட்டி - எம்மா ரடுகானு அதிர்ச்சித் தோல்வி!
முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான எம்மா ரடுகானு, தரவரிசையில் தம்மைக் காட்டிலும் பின்தங்கியுள்ள குரோஷிய வீராங்கனையிடம் வீழ்ந்தது டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரோஷியாவின் ஆன்டோனியா ருசிச் உடன் மோதிய எம்மா ரடுகானு, 1-6, 7-5, 2-6 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்தார். முதல் செட் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய ஆன்டோனியா ருசிச், மிக எளிதாக 6-1 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட் ரடுகானு அபாரமாகப் போராடி 7-5 என்ற கணக்கில் இந்த செட்டை வென்று பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டம் சமநிலைக்கு வந்து பரபரப்படைந்தது.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் ரடுகானு 2-0 என முன்னிலை வகித்தார். ஆனால், அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட ருசிச், அடுத்தடுத்து 6 கேம்களை வென்று 6-2 என்ற கணக்கில் ரடுகானுவை வீழ்த்தினார்.
ஆன்டோனியா ருசிச் உண்மையில் தகுதிச் சுற்றுடன் வெளியேற வேண்டியவர். ஆனால், இத்தாலிய வீராங்கனை எலிசபெட்டா கோசியாரெட்டோ காயம் காரணமாக விலகியதால், 'லக்கி லூசர்' அடிப்படையில் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ரடுகானுவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்த ஆட்டத்தின் போதும் எம்மா ரடுகானு மருத்துவ உதவியைப் பெற வேண்டியிருந்தது. கடந்த வார கத்தார் ஓபனிலும் உடல்நலக் குறைவால் அவர் பாதியிலேயே விலகியது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது உடல்தகுதி குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!