"முதல்வராக இருந்தாலும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை!" - சீமானின் அதிரடி சட்டத் திட்டம்!
சென்னை திருவேற்காடில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது ஆட்சி அமைந்தால் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் கொண்டு வரப்போகும் அதிரடி மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
சிகிச்சைக்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதைக் கடுமையாகச் சாடிய சீமான், ஒரு புதிய சட்டத் திட்டத்தை முன்மொழிந்தார்: "நாட்டின் முதல்வராகவே இருந்தாலும், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட வேண்டும் எனச் சட்டம் போடுவேன். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும். இப்படிச் செய்யும் போது, அரசு மருத்துவமனைகளின் தரம் தானாகவே உயர்ந்துவிடும்."
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது குறித்து அவர் கூறியதாவது: கட்டாயக் கல்வி: அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அனைவரும் கட்டாயமாக அரசுப் பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும்தான் பயில வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளிக் கல்லூரி விழாக்களில் திரைப்பாடல்களுக்கு நடனமாடுவதைத் தவிர்த்து, மொழி, பண்பாடு மற்றும் வளம் சார்ந்த பாடல்கள் இடம் பெற வேண்டும்.
தமிழகத்தில் வழங்கப்படும் இலவசத் திட்டங்களை "வீழ்ச்சித் திட்டம்" என்று விமர்சித்த அவர், "இலவசங்களைக் கொடுத்து மக்களை அடிமைகளாக்கி வைத்திருக்கிறீர்கள். இலவசம் என்பது வளர்ச்சி அல்ல. தரமான கல்வி, நல்ல வேலை, தகுதியான சம்பளம், தூய குடிநீர் மற்றும் சாலை வசதி - இவைதான் மக்களின் அடிப்படைத் தேவைகள்" என்றார்.
காசு கொடுத்துக் கூட்டத்தைக் கூட்டுபவர்கள் மத்தியில், தனது கொள்கைக்காக மக்கள் தானாகக் கூடுவதாகக் குறிப்பிட்ட அவர், "நடிகர்கள் நாட்டை ஆளத் தயாராகிவிட்டார்கள். காசு கொடுத்தால்தான் மாநாட்டிற்கு வருவார்கள் என்ற நிலையில், எங்களைப் போன்று தனித்துப் போட்டியிட்டு, கொள்கைகளைப் பேசி வெற்றி பெற்றுப் பாருங்கள். அப்போதுதான் அது உண்மையான வெற்றியாகும்" என்று மற்ற அரசியல் கட்சிகளுக்குச் சவால் விடுத்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!