"அப்பாவுக்கு மாரடைப்பு வந்தப்போ கூட எடப்பாடி வரலை".. முதுகில் குத்திய அதிமுக - லோகேஷ் உருக்கம்!
அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள அலுவலகத்தில் தனது விலகலுக்கான காரணங்களை விளக்கினார்.
"அதிமுகவில் எனது தந்தைக்கோ அல்லது கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கோ உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. அதிமுக தற்போது நான்கு ஐந்து நபர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது" என லோகேஷ் குற்றம் சாட்டினார். கடந்த ஜூலை மாதம் தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கியப் பிரமுகர்கள் யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை என்றும், இது தங்கள் குடும்பத்திற்குப் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் தாங்கள் முதுகில் குத்தப்பட்டதாகவும், எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா காலத்தில் கட்சி இவ்வாறு நடத்தப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். சிறு வயது முதலே நடிகர் விஜய்யின் ரசிகராக இருக்கும் தனக்கு, தவெக-வின் கொள்கைகள் மற்றும் விஜய்யின் மக்கள் செல்வாக்கு பிடித்துள்ளதாக அவர் கூறினார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சமூக நீதியைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும், அடிதட்டு மக்கள் தவெக மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது தந்தை தனபால் ஒரு தீவிர அதிமுக விசுவாசி என்பதால் அவர் கட்சியில் தொடருவார் என்றும், ஆனால் தனது இந்த முடிவிற்குத் தந்தையிடம் நேற்று தான் சம்மதம் பெற்றதாகவும் லோகேஷ் தெளிவுபடுத்தினார்.
பாஜக-வுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகக் குறிப்பிட்ட அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் சூளுரைத்தார். கொங்கு மண்டலத்தின் முக்கிய அதிமுக குடும்பத்தைச் சேர்ந்த லோகேஷின் இந்தப் பேட்டி, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!