பட்டாசு திரி தயாரிக்கையில் வெடி விபத்து... உடல் கருகி 2 வடமாநிலச் சிறுவர்கள் பலி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு, ரகசியமாகப் பட்டாசுத் திரி தயாரிப்பில் ஈடுபட்ட உரிமையாளரின் அலட்சியத்தால் இரண்டு இளம் உயிர்கள் பறிபோயுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் - கே.மேட்டுப்பட்டி சாலையில் நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த சரவணன்-கவிதா தம்பதிக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை, இயந்திரம் மூலம் பட்டாசுக்குத் தேவையான கருந்திரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வினால் தீப்பொறி சிதறி வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்தக் கோர விபத்தில் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சபிக்கு அலி (14), ஜொகீதுல் உசேன் (17) என்கிற இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இது குறித்த தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) கண்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.
அந்த இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், அனுமதியின்றி ரகசியமாகப் பட்டாசுத் திரி தயாரிக்கும் கூடம் இயங்கி வந்துள்ளது. உயிரிழந்த இருவருமே 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பதால், குழந்தைத் தொழிலாளர்களை அபாயகரமான பணியில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தோட்டத்தின் உரிமையாளரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!