சட்டசபை முன் விவசாயி தீக்குளிப்பு... பெரும் பரபரப்பு!
மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜோதிராம் சாகேப்ராவ் சவான், தனது விளைநிலத்திற்குச் செல்ல சரியான பாதை கேட்டுப் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், மும்பையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த சட்டசபையை நோக்கி வந்து, அனைவரையும் அதிர வைக்கும் வகையில் ஒரு 'ஸ்கெட்ச்' போட்டார். உஷா மேத்தா சவுக் பகுதியில் திடீரென ஒரு பாட்டிலை எடுத்துத் தன் மீது திரவத்தை ஊற்றத் தொடங்கியதைக் கண்டு அங்கிருந்த போலீசாரும் மீடியாக்களும் பதறிப்போயினர்.
அவர் தீக்குளிக்கப் போகிறார் என்று நினைத்துப் பாதுகாப்புப் படையினர் பாய்ந்து சென்று அவரைப் பிடித்தனர். ஆரம்பத்தில் அவர் ஊற்றிக்கொண்டது பெட்ரோல் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், போலீசாரின் விசாரணையில் அது பெட்ரோல் அல்ல, வெயிலுக்கு இதமாக அருந்தும் ‘ரஸ்னா’ குளிர்பானக் கரைசல் என்பது தெரியவந்தது. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும், அமைச்சரின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கவே இந்த நூதன 'நாடகத்தை' அரங்கேற்றியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து சவானைக் கைது செய்த போலீசார், அவரைத் தீவிரமாக எச்சரித்து விடுவித்தனர். இருப்பினும், அவரது நூதனப் போராட்டம் வீண் போகவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விவசாயியின் கோரிக்கையை முன்னுரிமை அடிப்படையில் சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 'ரஸ்னா' ஊற்றிக்கொண்டு ரகளை செய்த விவசாயியின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!