செல்போன் பேசுவதை தந்தை கண்டித்ததால் விபரீதம்... கல்லூரி மாணவி தற்கொலை!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே, நீண்ட நேரம் செல்போன் பேசியதைக் கண்டித்த தந்தையின் பேச்சால் மனமுடைந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த குருநல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (55), கூலித் தொழிலாளி. இவருடைய மகள் நந்தினி (17). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, நந்தினி தனது வீட்டில் நீண்ட நேரமாகச் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தந்தை காளியப்பன், இரவு நேரமாகிவிட்டதால் "செல்போனை வைத்துவிட்டுச் சீக்கிரம் தூங்கு" என்று மகளைக் கண்டித்துள்ளார்.
தந்தை திட்டியதால் மிகுந்த மனவேதனையடைந்த நந்தினி, தனது சித்தப்பா மகன் குணசேகரனைத் தொடர்பு கொண்டு, "தந்தை தன்னைத் திட்டிவிட்டார்" என்று கூறி அழுதுள்ளார். பின்னர், யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் இருந்த நந்தினியை உறவினர்கள் மீட்டு உடனடியாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நந்தினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார், உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநல ஆலோசனைக்கான குறிப்பு:
தற்கொலை எண்ணம் என்பது ஒரு நொடிப் பொழுதில் ஏற்படும் பலவீனம். இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் அல்லது மன அழுத்தம் இருந்தால், உதவிக்கு தமிழக அரசு உதவி எண்: 104, சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!