காதலுக்கு தந்தை எதிர்ப்பு... கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
ஈரோடு மாவட்டம் கோட்டை முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், காதலால் ஏற்பட்ட மோதல் ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது.
ஈரோடு கோட்டை பகுதியைச் சேர்ந்த குருராஜன் என்பவரின் மகள் நந்தினி (19). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நந்தினி வசிக்கும் வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கும் சரவணன் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் நந்தினியின் தந்தை குருராஜனுக்குத் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகளை அழைத்துப் பேசிய அவர், "காதலை மறந்து விட்டுப் படிப்பில் கவனம் செலுத்து" என்று கண்டிப்புடன் அறிவுரை கூறியுள்ளார். தந்தையின் கண்டிப்பால் கடந்த இரண்டு நாட்களாக நந்தினி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். நேற்று காலை, "குளித்து விட்டு வருகிறேன்" என்று கூறி அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த தந்தை கதவைத் திறந்து பார்த்தபோது, நந்தினி தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட நந்தினி, ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நந்தினியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நந்தினியின் காதலர் சரவணனிடமும் போலீசார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் இது போன்ற விபரீத முடிவுகள், அவர்களை வளர்த்த பெற்றோரின் வாழ்நாள் முழுவதும் மாறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றன. பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேசுவதும், பிரச்சனைகளுக்குத் தற்கொலை தீர்வாகாது என்பதை உணர்வதும் அவசியம்.
உங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருந்தாலோ அல்லது மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தமிழக அரசின் 'சினேகா' அமைப்பின் 044-24640050 அல்லது மாநில உதவி எண் 104-ஐத் தொடர்பு கொள்ளலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!