பெண் காவல் உதவி ஆய்வாளர் கணவர் வெட்டிக்கொலை... பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சித்தர் (56), தனது வீட்டில் வசிக்கும் தாயாரை சந்தித்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் ஜேக்கப் அவரை வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருவருக்கும் இடையே நீண்டநாள் நிலத் தகராறு இருந்து வந்த நிலையில், அந்த விவகாரம் குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென தீவிரமடைந்தது.
ஆத்திரமடைந்த ஜேக்கப், முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜேம்ஸ் சித்தரை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. தோள்பட்டை, கால், தொடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் காயமடைந்த ஜேம்ஸ் தரையில் சரிந்தார். சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். சம்பவத்திற்குப் பிறகு ஜேக்கப் தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஜேம்ஸின் மனைவியும், சாத்தான்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான மெட்டில்டா, கணவரின் உடலைக் கண்டதும் கதறி அழுதார். நிலத்திற்கு வேலி அமைப்பது தொடர்பான பிணக்கே இந்தக் கொலையின் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!