ஐந்தரை அடி உயரம்... 300 கிலோ எடை... திருவண்ணாமலை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது தீபக் கொப்பரை! நாளை மாலை மகாதீபம்!
உலகப் பிரசித்தி பெற்றதும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவதுமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றப்படுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அதன் முக்கியப் பணியாக, மகாதீபக் கொப்பரை இன்று டிசம்பர் 2ம் தேதி மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவுக்கு ஒரு முக்கியமான ஐதீகம் உள்ளது.
திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே "நான் பெரியவன், நீ பெரியவன்" என்ற அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அவர்களது அகந்தையைப் போக்க எண்ணி, அடி முடி காண முடியாத அக்னிப் பிழம்பாகத் திருவண்ணாமலையில் காட்சியளித்தார். சிவபெருமான் அக்னி பிழம்பாகக் காட்சியளித்த அந்த நாளே, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. சிவபெருமான் அக்னிப் பிழம்பாகக் காட்சி கொடுத்ததைப் போற்றும் விதமாக, கார்த்திகை தீபத் திருவிழாவின்போது இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மகாதீபம் ஏற்றுவதற்கான முக்கியப் பொருளான தீபக் கொப்பரை இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தக் கொப்பரையானது சுமார் ஐந்தரை அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்டது. இது செம்பினால் செய்யப்பட்டதாகும். சுமார் 2,600 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையில், இந்தக் கொப்பரையைத் திருக்கோயில் ஊழியர்கள் மற்றும் திருப்பணியாளர்கள் இணைந்து தோளில் சுமந்தபடிப் பாதைகள் வழியாகக் கொண்டு சென்றனர். இந்தக் கொப்பரை மலை உச்சியில் உள்ள பிரத்யேக இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மகாதீபக் கொப்பரையில் தான் சுமார் 4,500 கிலோ தூய நெய் மற்றும் 1,500 மீட்டர் நீளத் துணித் திரி ஆகியவற்றைப் பயன்படுத்தி நாளை (டிசம்பர் 3, புதன்கிழமை) மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
நாளை அதிகாலை 4 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோயில் கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்குச் சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டு, அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோயிலிலும், கிரிவலப் பாதையிலும் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் தீபத்தைத் தரிசிப்பார்கள். மகாதீபம் ஏற்றப்படும் நாள் என்பதால், திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!