20 ஆண்டுகாலப் பகையை மறந்து மும்பை மாநகராட்சித் தேர்தலில் மெகா கூட்டணி... தாக்கரே சகோதரர்கள் அதிரடி!
மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் கைகோர்த்துள்ளனர். வரும் ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி (BMC) தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவுக்கும், அவரது சகோதரர் மகன் ராஜ் தாக்கரேவுக்கும் இடையே கடந்த 2005-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சிவசேனாவிலிருந்து வெளியேறிய ராஜ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) கட்சியைத் தொடங்கினார். கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் களத்தில் நேருக்கு நேர் மோதி வந்த இவர்கள், சமீபத்திய சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் மாற்றங்களால் மீண்டும் நெருக்கமடைந்தனர். தற்போது மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு இந்தக் கூட்டணி அதிகாரப்பூர்வமாகியுள்ளது.
மும்பையைப் பொறுத்தவரை 'மண்ணின் மைந்தர்கள்' (மராட்டியர்கள்) வாக்கு வங்கி மிக முக்கியமானது. உத்தவ் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ் ஆகிய இரு கட்சிகளுமே மராட்டியர்களுக்கான உரிமைகளை முதன்மைப்படுத்துபவை. இந்த இரண்டு சக்திகளும் ஒன்றிணைவது மராட்டிய அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
"நாங்கள் 20 ஆண்டுகாலப் பகையை மறந்து கைகோர்த்துள்ளோம். மும்பையின் நலனுக்காகவும், மராட்டிய மக்களின் உரிமைக்காகவும் இணைந்து செயல்படுவோம்" என்று இரு தலைவர்களும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மெகா கூட்டணி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "தாக்கரே சகோதரர்களின் இந்தக் கூட்டணி தேர்தல் முடிவுகளில் எந்தப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என விமர்சித்துள்ளார். இருப்பினும், மும்பை மாநகராட்சியைத் தக்கவைக்கத் துடிக்கும் ஆளுங்கட்சிக்கு இது ஒரு சவாலாகவே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்தத் தேர்தல் அறிவிப்பு மும்பை மாநகராட்சியின் அதிகாரப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியாகக் கருதப்படும் பி.எம்.சி-யை (BMC) யார் கைப்பற்றப் போகிறார்கள் என்பது மராட்டிய அரசியலின் அடுத்தகட்டத்தை தீர்மானிக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!