கதறிய நண்பர்கள்... கேட்ச் பிடிக்க எகிறியதில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மைதானத்தில் நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தில் நண்பர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பந்தைப் பிடிக்க முயன்று வாலிபர் ஒருவர் எகிறிய போது, தாழ்வாக சென்றுக் கொண்டிருந்த மின்கம்பி மீது உரசியதால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மணமேல்குடி அருகே உள்ள ஓட்டங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுமன் (22). கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திய இவர், இன்று தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பேட்ஸ்மேன் அடித்த பந்து உயரே பறந்து சென்றது. அந்தப் பந்தை 'கேட்ச்' பிடிப்பதற்காக சுமன் ஓடிச் சென்று எகிறிப் குதித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த மைதானத்தின் மேலே மிகத் தாழ்வாகச் சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பி மீது சுமனின் கை பட்டது.
மின்னல் வேகத்தில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்ட சுமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றும் அவரைப் காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மணமேல்குடி காவல்துறையினர், சுமனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைதானங்கள் மற்றும் விளைநிலங்களுக்கு மேலே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வது குறித்து ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடச் சென்ற இளைஞர் சடலமாகத் திரும்பிய நிகழ்வு, ஓட்டங்கரை கிராமத்தையே கண்ணீரில் நனைய வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!