தங்க அங்கி ஊர்வலம் முதல் மகர ஜோதி வரை... சபரிமலை முக்கிய தேதிகள் அறிவிப்பு!
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை விழா வரும் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதமிருக்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு இந்த மண்டல பூஜை காலம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலையாள விருச்சிக மாதத்தின் முதல் நாளில் தொடங்கிய இந்த யாத்திரை காலம், தற்போது அதன் உச்சகட்டமான மண்டல பூஜையை நெருங்கியுள்ளது.
தங்க அங்கி ஊர்வலம்: மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான 'தங்க அங்கி' ஊர்வலம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட உள்ளது. பல்வேறு ஊர்கள் வழியாகக் கோலாகலமாக வரும் இந்த ஊர்வலம், டிசம்பர் 26-ஆம் தேதி மாலை சந்நிதானத்தை வந்தடையும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்குத் தங்க அங்கி அணிவிக்கப்பட்டுச் சிறப்புத் தீபாராதனை நடைபெறும்.
மண்டல பூஜை நேரம்: சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை, டிசம்பர் 27-ஆம் தேதி காலை 10.10 மணி முதல் 11.30 மணிக்குள் உள்ள சுப முகூர்த்தத்தில் நடைபெறும். அன்றைய தினம் மதியம் 11.30 மணிக்குச் சிறப்புத் தீபாராதனை நடைபெறும். மண்டல பூஜை நிறைவடைந்ததும், அன்று இரவு 11 மணிக்கு 'ஹரிவராசனம்' இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். இதோடு 41 நாட்கள் நீடித்த மண்டல கால பூஜைகள் இனிதே நிறைவு பெறும்.
மகர விளக்கு தரிசனம்: மண்டல பூஜைக்குப் பின் மூன்று நாட்கள் நடை அடைக்கப்பட்டிருக்கும். பின்னர் மகர விளக்கு திருவிழாவிற்காக டிசம்பர் 30-ஆம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும். ஒட்டுமொத்த பக்தர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் 'மகர ஜோதி தரிசனம்' மற்றும் 'மகர விளக்கு பூஜை' ஜனவரி 15-ஆம் தேதி (பொங்கல் அன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகப் பெருவிழாவான இதில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைத் தேவஸ்வம் போர்டு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!