உயிரோடு இருக்கும்போதே நடந்த ஈமச்சடங்கு... 1,900 பேருக்கு விருந்து வைத்து அசத்தல்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆரையா பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ராகேஷ் யாதவ், தனக்குச் சொந்தமாக நிலம் மற்றும் வாரிசுகள் இல்லாத நிலையில் ஒரு விசித்திரமான அதேசமயம் உருக்கமான முடிவை எடுத்துள்ளார். தனது சகோதரர்கள் மறைந்துவிட்ட நிலையில், திருமணம் ஆகாத ஒரு சகோதரியுடன் வசித்து வரும் இவர், தான் இறந்த பிறகு தனக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள் என்று நீண்ட நாட்களாக வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த ஏக்கத்தில் இருந்து விடுபட, தான் உயிரோடு இருக்கும்போதே தனக்கான மரண பிந்தைய சடங்குகளை (பந்தாரா) நடத்த அவர் அதிரடியாகத் திட்டமிட்டார்.
இதற்காக முறைப்படி அழைப்பிதழ் அச்சடித்து, சுமார் 1,900 பேருக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று ஏராளமான கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அவரது கூடாரத்திற்குத் திரண்டு வந்தனர். முன்னோர் முறைப்படி நடத்தப்படும் ஈமக்கிரியைகள் மற்றும் விசேஷ பூஜைகள் அனைத்தும் அவர் கண் முன்னாலேயே பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டன. சடங்குகள் முடிந்த கையோடு, வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது, இது அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தனது இந்த விசித்திரமான முடிவு குறித்து ராகேஷ் யாதவ் கூறுகையில், தனக்குப் பின்னால் ஈமச்சடங்கு செய்யவோ, மற்றவர்களுக்குப் பந்தாரா விருந்து வழங்கவோ வாரிசுகள் யாரும் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தான் உயிரோடு இருக்கும்போதே தனது கடமைகளை முடித்துவிட்டதாக அவர் நிம்மதி அடைந்துள்ளார். தனிமையில் வாடும் ஒரு முதியவரின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!