"இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி" - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்!
மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைத்த ‘மறவோம்’ நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். காந்தியடிகளின் எளிமையை உலகம் போற்றும் வகையில் மாற்றிய மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காந்தியம் மற்றும் மதநல்லிணக்கம் குறித்து பேசிய முதல்வர், காந்தி தனது ஆடம்பர உடைகளைத் துறந்து, எளிமையின் அடையாளமான அரையாடைக்கு மாறியது இந்த மதுரை மண்ணில்தான் என்பதை நினைவு கூர்ந்தார்.
இந்தியாவின் முதல் காந்தி அருங்காட்சியகம் மதுரையில்தான் அமைக்கப்பட்டது. தற்போது திராவிட மாடல் ஆட்சியில் 10 கோடி ரூபாய் செலவில் இந்த அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இங்குதான் காந்தி சுடப்பட்டபோது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேட்டி பாதுகாக்கப்படுகிறது.
முதல்வர் தனது உரையில் இன்றைய அரசியல் சூழலையும் காந்தியத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். "காந்தி என்பது வெறும் பெயரல்ல, அது ஒற்றைத்துவத்திற்கு எதிரான கருத்தியல். அவர் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம். மதநல்லிணக்கத்தின் மகத்தான மந்திரம்" என முதல்வர் வர்ணித்தார்.
மத்திய பாஜக அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்கியது உள்ளிட்ட செயல்கள் மூலம் காந்தியின் கொள்கைகளை அழிக்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார். காந்தி மறைந்தபோது, இந்திய தேசத்திற்கு 'காந்தி தேசம்' எனப் பெயரிட வேண்டும் என்று பெரியார் உணர்ச்சி பொங்கக் கோரிக்கை விடுத்ததை முதல்வர் நினைவுகூர்ந்தார்.
கமல்ஹாசன் தனது 'ஹே ராம்' படம் மூலம் வெறுப்பரசியல் எப்படித் தோல்வியடையும் என்பதைக் காட்டியவர் என்றும், காந்தியின் கொள்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் பாராட்டினார். வரவிருக்கும் தேர்தல் என்பது 'தமிழ்நாடு vs NDA' இடையிலான போட்டி என்றும், இதில் வெறுப்பு அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்றும் முதல்வர் உறுதியாகத் தெரிவித்தார். சமூக நீதி மற்றும் சம நீதிக்காகக் குரல் கொடுத்து வரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கும் முதல்வர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!