குட் நியூஸ்... தமிழகம் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாகிறது!
தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மாபெரும் வெற்றியை எட்டியுள்ளது. 2025-26 ஆம் கல்வியாண்டில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி, கூடுதலாக 733 பேர் தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளதால், தமிழ்நாட்டை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கப் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திட்டம் 38 மாவட்டங்களிலும் 2022-23 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு இலக்கு:
நிகழ் கல்வியாண்டில் (2025-2026), 15 லட்சத்து 309 எழுதப் படிக்கத் தெரியாதோருக்கு எழுத்தறிவு வழங்கிட மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு இலக்கு நிர்ணயித்திருந்தது.
செயல்பாடுகள்:
இந்த இலக்கை அடைவதற்காக, முதற்கட்டமாக 5 லட்சத்து 37 ஆயிரத்து 869 கற்போருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு ஜூன் 15 அன்றுத் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 9 லட்சத்து 63 ஆயிரத்து 169 கற்போர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 39 ஆயிரத்து 250 எழுத்தறிவு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
சாதனை:
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.14) நடத்தப்பட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 15 லட்சத்து 309 கற்போரை விடக் கூடுதலாக 733 பேர் தேர்வெழுதி உள்ளனர்.
முழு எழுத்தறிவு மாநிலம்: அறிவிப்பு எப்போது?
தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி இத்திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நடத்தப்பட்டத் தேர்வுகளின் தேர்ச்சி முடிவுகள் மத்திய அரசின் சார்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர், தமிழகம் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்படுவதற்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!