மத்திய பட்ஜெட்டில் உங்கள் ஆலோசனைகளை கூறலாம் - அரசு அழைப்பு... எப்படி பதிவு செய்வது? முழு விபரம்!
இந்தியாவின் அடுத்த நிதியாண்டிற்கான (2026-2027) மத்திய பட்ஜெட் வரும் 2026 பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த முறை பட்ஜெட் தயாரிப்பில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், 'மக்கள் பங்கேற்பு' (Jan Bhagidari) என்ற அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் உங்களது மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறது. மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில்முறை வல்லுநர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கான தங்களது ஐடியாக்களைப் பகிரலாம்.
கருத்துகளைப் பகிர கடைசி நாள்:
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான MyGov தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்தக் கருத்துகளைப் பதிவு செய்ய 2026 ஜனவரி 16, மாலை 5:30 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் பொதுமக்களால் வழங்கப்பட்ட பல சிறப்பான ஆலோசனைகள் பட்ஜெட்டில் திட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, சுகாதாரம், விவசாயம், வரிச் சலுகைகள் அல்லது டிஜிட்டல் இந்தியா போன்ற எந்தவொரு துறை சார்ந்த ஆலோசனைகளையும் நீங்கள் வழங்கலாம்.
எப்படிப் பதிவு செய்வது?
நாட்டின் நிதிப் பாதையை வடிவமைக்க நீங்கள் விரும்பினால், MyGov (mygov.in) இணையதளத்திற்குச் சென்று 'Union Budget 2026-27 Suggestions' என்ற பகுதியில் உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். வரி விதிப்பில் மாற்றம் தேவை என்றோ அல்லது புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த பரிந்துரைகளையோ நேரடியாக அரசிடம் கொண்டு சேர்க்க இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
பிப்ரவரி 1: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்?
வழக்கமான நடைமுறைப்படி பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 2026-இல் அந்தத் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்றே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா அல்லது அடுத்த நாள் மாற்றப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்றக் விவகாரங்கள் குழு விரைவில் வெளியிடும். இருப்பினும், கடந்த காலங்களில் சனிக்கிழமைகளிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பிப்ரவரி 1-ஆம் தேதியே பட்ஜெட் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!