அரசுப் பேருந்துகள் தொடர் விபத்து: ஓட்டுநர்களுக்கு பணிச்சுமையா? - அமைச்சர் சிவசங்கர் பதில்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை விவரங்கள் குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
விபத்து குறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ஓட்டுநர் நியமனம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விளக்கமளித்தார். விபத்து நடந்தவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் துரித நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் உத்தரவிட்டார்.
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பதால் விபத்துகள் நடக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதைத் தவறானது என்று அமைச்சர் கூறினார். "பணிக்கு எடுக்கும்போது உரிய அனுபவமுள்ள, தகுதியான டிரைவர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
நீண்ட தூரப் பேருந்துகளை அனுபவமுள்ள ஓட்டுநர்கள்தான் இயக்கி வருகிறார்கள் என்றும், இந்த விபத்து ஏதோ ஒரு அஜாக்கிரதை காரணமாக நடைபெற்றுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். விபத்துக்கான காரணங்களில், ஓட்டுநர்களுக்குப் பணிச்சுமை இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்வோம் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதைத் தடுக்க, ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளை இன்னும் அதிகப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, தேவைப்பட்டால் கூடுதலாக நிவாரணம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!