undefined

பெரும் சோகம்... ஒரு வாரத்தில கல்யாணம்... இரும்புக்குழாய் உடைந்து தலையில் விழுந்து இளைஞர் பலி! 

 


விழுப்புரம் மழவராயனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தவமணி. இவர் தி.மு.க. மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக இருந்து வருகிறார்.  இவருடைய மகன் 29 வயது கலாநிதி.  இவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து  வந்தார்.

இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு மார்ச் 16ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக கலாநிதி நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்தில் புறப்பட்டு சென்றார்.  மாலை 4.30 மணிக்கு  விழுப்புரம் அருகே கோலியனூருக்கு அவர் வந்திறங்கினார். பின்னர் அவரை உறவினரான குணசேகரன் என்பவர், மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். 

இந்நிலையில் மாலை 4.45 மணிக்கு  கோலியனூர் ரயில்வே கேட் அருகே அவர்கள் வந்திருந்தனர். அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் ரயிலுக்காக அங்குள்ள ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிரே பண்ருட்டியில் இருந்து சென்னை மார்க்கமாக ஒரு லாரி வந்தது. ரயில்வே கேட்டை மூடுவதற்குள் கேட்டை கடந்து சென்று விடலாம் என எண்ணி லாரியை அதன் டிரைவர் வேகமாக இயக்கத் தொடங்கினார். இதைப்பார்த்த குணசேகரனும், கலாநிதியும் லாரி செல்லும் அதே சமயத்தில் நாமும் கேட்டை கடந்து சென்றுவிடலாம் என எண்ணி கடக்க முயற்சித்தனர்.  

அப்போது ரயில்வே கேட் மேலிருந்து பாதி இறங்கிய நிலையில் ரயில்வே கேட்டின் மீது லாரி மோதியது. இதில் அந்த கேட்டின் இரும்புக்குழாய் இரண்டாக உடைந்து துண்டானதில் அதன் ஒருபகுதி, லாரியின் பக்கவாட்டில் வந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த கலாநிதியின் தலையில் பலமாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த  அவர், அதே இடத்தில் மயங்கி விழுந்தார். உடனே லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில்  போலீசாரும்  ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கலாநிதியை மீட்டு சிகிச்சைக்காக   அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதை கேள்விப்பட்டதும் கலாநிதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று கலாநிதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை, விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது,

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?