அனுமன் ஜெயந்தி: 1,00,008 வடைகளால் பிரம்மாண்ட மாலை! நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்மாண்டம்!
நாமக்கல்லின் அடையாளமாகவும், ஆன்மிகப் பொக்கிஷமாகவும் விளங்கும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், நாளை டிசம்பர் 19ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. 18 அடி உயரத்தில், ஒரே கல்லால் உருவான சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி அமாவாசை அன்று நடைபெறும் இந்த விழா உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டு விழாவின் சிகர நிகழ்ச்சியாக, சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட உள்ளது.
இந்த மகா மாலையைத் தயாரிப்பதற்காகக் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் சமையல் கலைஞர்கள் இரவு பகலாகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2,500 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், தலா 32 கிலோ மிளகு மற்றும் சீரகம், 82 கிலோ உப்பு ஆகியவற்றைக்கொண்டு இந்த வடைகள் சுடப்படுகின்றன. தயார் செய்யப்பட்ட வடைகள் அனைத்தும் கயிற்றில் கோர்க்கப்பட்டு மாலையாக மாற்றப்பட்டு, அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலை 5 மணிக்கே ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும். வடைமாலை அலங்காரத்தில் ஜொலிக்கும் ஆஞ்சநேயரைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடைமாலை அலங்காரத்தைத் தொடர்ந்து, அன்று காலை 11 மணியளவில் சுவாமிக்கு 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெறும். விழாவின் இறுதியாக ஆஞ்சநேயருக்குத் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும். பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், கூட்டத்தை முறைப்படுத்தக் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் வரிசை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!