போதையில் கால்வாயில் மயங்கி விழுந்த சுமைதூக்கும் தொழிலாளி பலி!
தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள பக்கிள் ஓடை பாலத்தின் கீழ், கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகத் தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சாக்கடைக்குள் சடலம் சிக்கியிருந்ததால், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அது மீட்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வம் (45) என்பதும், அவர் எப்.சி.ஐ. குடோனில் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
நேற்று இரவு வேலை முடிந்த பிறகு, செல்வம் அந்தப் பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது போதை தலைக்கேறிய நிலையில் நிலைதடுமாறிய அவர், எதிர்பாராதவிதமாகப் பாலத்தின் கீழே இருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்துள்ளார். அங்கிருந்து வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தென்பாகம் போலீசார், இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த செல்வத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த செல்வத்திற்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த தந்தை, மது போதையால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் போதையில் பாலங்கள் மற்றும் கால்வாய் ஓரங்களில் அமருபவர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!