சென்னையில் காற்றுடன் மழை... இன்றும் மெரினா, எலியாட்ஸ் கடற்கரைக்குச் செல்லத் தடை நீடிப்பு!
வங்கக் கடலில் நிலவிய ‘டிட்வா’ புயலின் தாக்கமும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் நீடிப்பதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மெரினா கடற்கரைக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்றும் (டிசம்பர் 1) நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ‘டிட்வா’ புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது இன்று வட தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 1ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
நேற்று (நவம்பர் 30) புயல் காரணமாக மெரினா கடற்கரைக்குச் செல்லப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் காற்றுடன் மழை பெய்து வருவதாலும், கடற்கரைப் பகுதிகளில் கடல் அலைகளின் சீற்றம் காரணமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்லாத வகையில், போலீசார் தடுப்புகளை அமைத்துத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருவதால், காலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!