இன்று டெல்டா, தென்மாவட்டங்களில் பலத்த மழை... நவ.26ல் சென்யார் புயல்!

 

தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற புதன்கிழமை (நவ.26) 'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று (நவ.24) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் சனிக்கிழமை (நவ.22) நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவுகிறது.

தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, திங்கள்கிழமை (நவ.24) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் அதே திசையில் நகா்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், புதன்கிழமை (நவ.26) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 'சென்யாா்' புயலாக உருவாகக்கூடும். இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஞாயிற்றுக்கிழமை (நவ.23) உருவானது. இதன் காரணமாகக் குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை (நவ. 25) உருவாகக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.24) முதல் நவ.29 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவ.24) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

சென்னை புறநகா் பகுதிகளில் இன்று (நவ.24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!