ஆணவக் கொலை பயங்கரம்... காதல் திருமணம் செய்த மகளைத் தலையணையால் அமுக்கிக் கொன்ற தந்தை!
ஆந்திர மாநிலம் மச்சேர்லா நகரில் காதல் திருமணம் செய்த 22 வயது இளம்பெண் சவ்டேஸ்வரி, தனது பெற்றோர் வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 4-ம் தேதி குடும்பத்தின் கடும் எதிர்ப்பையும் மீறிச் சவ்டேஸ்வரி தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை சந்திர சீனு, தனது மகளைக் காணவில்லை எனத் திட்டமிட்டுப் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக இருந்த சவ்டேஸ்வரியைக் கடந்த மாதம் 15-ம் தேதி கண்டுபிடித்த போலீசார், அவரை மிரட்டி மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்துள்ளனர். பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டிய அந்தப் பெண், மரணக் குழியில் தள்ளப்பட்டது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
பெற்றோர் வீட்டிற்குச் சென்ற மூன்றே நாட்களில் சவ்டேஸ்வரி மாரடைப்பால் அல்லது தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் நாடகமாடினர். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கையில் வெளிவந்த உண்மை அனைவரையும் உறைய வைத்துள்ளது. சவ்டேஸ்வரி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவரது முகத்தில் தலையணையை வைத்துப் பலமாக அழுத்தியதால் மூச்சுத் திணறி அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. கள்ளம் கபடம் அறியாத மகளைத் தந்தை மற்றும் உறவினர்களே சேர்ந்து ‘ஆணவக் கொலை’ செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதையடுத்தே தந்தை சந்திர சீனு மற்றும் அவரது உறவினரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்தக் கொடூரச் செயலில் காவல்துறை ஆய்வாளரின் (Inspector) பங்கு குறித்தும் தற்போது அதிரடி விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சவ்டேஸ்வரியின் குடும்பத்தினரைக் காப்பாற்றவும், இந்தக் கொலையை மறைக்கவும் அந்த ஆய்வாளர் பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சவ்டேஸ்வரியின் குடும்பத்தினர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பெருந்தொகையை எடுத்துள்ளது ஆதாரமாகச் சிக்கியுள்ளது. லஞ்சம் பெற்று குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தது உறுதியானால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நீதியை நிலைநாட்ட வேண்டிய போலீசாரே, ஒரு பெண்ணின் மரணத்திற்கு உடந்தையாக இருந்தது அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!