"கை இருந்தா தானே காளையை அடக்குவாய்?" - ஜல்லிக்கட்டு வீரரை ஓட ஓட விரட்டிக் கொன்ற கும்பல்!
"ஏறு தழுவுதல்" எனும் தமிழரின் வீர விளையாட்டில் காளைகளைத் துணிச்சலுடன் அடக்கி வந்த ஒரு இளம் வீரர், மனித மிருகங்களின் வன்முறைக்குப் பலியாகியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர் இன்பரசன் (23) என்பவர், இன்று காலை பட்டப்பகலில் ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட இன்பரசனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளைகளை வாங்குவது, விற்பது மற்றும் போட்டிகளில் காளைகளை அடக்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஜல்லிக்கட்டு களத்தில் யார் பெரியவர் என்ற ஈகோ மோதல், இறுதியில் ஒரு உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது.
இன்று காலை இன்பரசன் வேலைக்குச் செல்வதற்காக அழகாம்பாள்புரம் அரசுப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பதுங்கியிருந்த விக்னேஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. அவர்களிடம் இருந்து தப்பிக்க இன்பரசன் அலறியபடி ஓடியுள்ளார். ஆனால் அந்த வெறிபிடித்த கும்பல் அவரை விடாமல் விரட்டிச் சென்று மடக்கியது.
நிலைதடுமாறி கீழே விழுந்த இன்பரசனைச் சூழ்ந்த கும்பல், "உனக்குக் கைகள் இருந்தால் தானே வாடிவாசலில் காளைகளை அடக்குவாய்?" என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி, அவரது இரண்டு கைகளையும் முதலில் துண்டித்துள்ளனர். பின்னர் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய இன்பரசனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வல்லதரிஆக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் நளினி தலைமையிலான தனிப்படை, தலைமறைவாக உள்ள விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேரைத் தீவிரமாகத் தேடி வருகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள சூழலில், ஒரு வீரர் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!