இசைஞானி இளையராஜாவுக்கு 'பத்மபாணி' விருது: மகாராஷ்டிராவில் ஜனவரி 28-ல் கௌரவிப்பு!
இந்தியத் திரையிசையில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கி வரும் இளையராஜாவுக்கு, அவரது வாழ்நாள் சாதனையைப் பாராட்டும் வகையில் பத்மபாணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்ரபதி சம்பாஜி நகர் (முன்பு அவுரங்காபாத்), எம்.ஜி.எம் வளாகத்தில் உள்ள ருக்மிணி அரங்கத்தில் வரும் ஜனவரி 28ம் தேதியன்று நடைபெறும் 11-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட (AIFF 2026) தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதானது பத்மபாணி நினைவுப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது.
பிரபல திரைப்பட விமர்சகர் லத்திகா பட்கோங்கர் தலைமையிலான குழுவில், புகழ்பெற்ற இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர் (லகான் பட இயக்குநர்), சுனில் சுக்தங்கர் மற்றும் சந்திரகாந்த் குல்கர்னி ஆகியோர் இடம்பெற்று இளையராஜாவை இந்த விருதுக்கு ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளனர்.
இந்தக் கௌரவமான விருதை இதற்கு முன் ஜாவேத் அக்தர் (பாடலாசிரியர் - 2024), சாய் பிரனாஜ்பே (இயக்குநர் - 2025), ஓம் பூரி (மறைந்த நடிகர்) ஆகியோர் பெற்றுள்ளனர். இளையராஜா இதுவரையில் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி எனப் பல்வேறு மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
லண்டன் சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து பணியாற்றிச் சர்வதேச அரங்கில் இந்திய இசைக்குப் பெருமை சேர்த்தவர். 2010-ல் பத்ம பூஷண் மற்றும் 2018ல் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளின் வரலாற்றுச் சிறப்பை முன்னிறுத்தி வழங்கப்படும் இந்த 'பத்மபாணி' விருது, இந்தியக் கலையின் உன்னதத்தை அடையாளப்படுத்துகிறது. அந்த வகையில், இந்திய இசையின் அடையாளமாகத் திகழும் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படுவது அவருக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்தத் தமிழ் திரையுலகிற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 70 சர்வதேசத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!