"நன்றிக்கடனைத் தீர்த்துட்டு தான் போவேன்!" - மலேசியாவில் கர்ஜித்த விஜய்: அரசியல் எதிரிகளுக்கு சவால்!
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தனது அரசியல் பிரவேசம் மற்றும் ரசிகர்களுடனான பந்தம் குறித்து விஜய் பேசிய பேச்சு, தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் பேசிய விஜய், தனது திரைப்பயணத்தின் வெற்றியை முழுமையாக ரசிகர்களுக்கு அர்ப்பணித்தார். "நான் சினிமாவில் நுழையும்போது ஒரு சிறிய மணல் வீடு கட்டத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், என் ரசிகர்கள் எனக்காக ஒரு கோட்டையையே கட்டிக் கொடுத்துவிட்டார்கள். கடந்த 33 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளார்கள். அடுத்த 33 ஆண்டுகளுக்கு நான் அவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கப் போகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தனது அரசியல் வருகைக்காக சினிமாவைத் துறப்பது குறித்த ரகசியத்தை உடைத்த விஜய், "எனக்காக எத்தனையோ விஷயங்களை விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக, நான் நேசிக்கும் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். அவர்களுக்கு வெறும் நன்றி மட்டும் சொல்லப் போவதில்லை, என் வாழ்நாள் முழுதும் உழைத்து அந்த நன்றிக்கடனைத் தீர்த்துவிட்டுத்தான் போவேன். இனி எனக்கு ஏதாவது ஒன்று என்றால் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் நிற்பார்கள், அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டு வாசலில் போய் நிற்பேன்" என்று உறுதி அளித்தார்.
அரசியல் களத்தில் தனக்கு முன் இருக்கும் சவால்கள் குறித்து மறைமுகமாகப் பேசிய விஜய், "வாழ்க்கையில் ஜெயிக்க நண்பர்கள் தேவையில்லை, ஆனால் வலுவான ஒரு எதிரி தேவை. அப்போதுதான் நாம் வலிமையானவராக மாற முடியும். அதேநேரம், வழியில் வருபவர் போபவர்களையெல்லாம் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது" என்று கூறினார். இது அவர் தனது அரசியல் எதிரிகளுக்கு விடுத்த நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியலில் கூட்டணி அமைப்பாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்ற விவாதங்களுக்குப் பதிலளித்த அவர், "விஜய் தனியாக வருவாரா அல்லது அணியாக வருவாரா என்று கேட்கிறார்கள். நான் எப்போது தனியாக இருந்திருக்கிறேன்? 33 வருஷமாக மக்களுடன்தானே இருக்கிறேன். மக்கள் கூட்டம் என்பதே ஒரு பெரிய அணிதானே!" என்று அதிரடியாகப் பேசினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!