இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அபாயம்? அமெரிக்க உளவுத்துறை பகீர் எச்சரிக்கை!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மீண்டும் அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிரடியான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தெற்காசியாவில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அந்நாட்டின் செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 34 பக்க விரிவான அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் எல்லைப் பதற்றங்களும், அவ்வப்போது அரங்கேறும் மோதல்களும் பெரும் போராக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் போன்ற நிகழ்வுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான பகையை மேலும் தீவிரப்படுத்துவதை அமெரிக்கா கவனித்து வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இத்தகைய மோதல்கள் அணு ஆயுதப் போர் நிலைக்குச் சென்றபோதும், சர்வதேசத் தலையீட்டால் அவை தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. இருப்பினும், எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகளால் எப்போது வேண்டுமானாலும் புதிய நெருக்கடிகள் உருவாகலாம் என்றும், அது இரு நாடுகளையும் மீண்டும் போர்க்களத்திற்கு இழுத்துச் செல்லும் என்றும் அமெரிக்கா அஞ்சுகிறது.
பாகிஸ்தான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அதிநவீன முறையில் மேம்படுத்தி வருவது உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக, நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை உருவாக்குவதில் பாகிஸ்தான் காட்டி வரும் வேகம், தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா போன்ற நாடுகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரிக்கும் பட்சத்தில், அது சர்வதேசப் பாதுகாப்பிற்கே பெரும் சவாலாக அமையும் என அமெரிக்க உளவுத்துறை தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!