இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 53 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு - கர்ப்பிணிகள், முதியவர்கள் விமானப் படை மூலம் மீட்பு!
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக இலங்கையில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோகமான சூழலில், அண்டை நாடான இந்தியா சார்பில் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணிகள் ‘ஆபரேசன் சாகர்பந்து’ என்ற பெயரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கடுமையான அளவில் உள்ளன. உயிரிழப்பு மற்றும் காணாமல் போனோர்: கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், 400 பேர் காணாமல் போயுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக 20,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து விட்டன. 2.19 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.08 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் இன்றித் தவித்து வருகின்றனர்.
இந்தியா சார்பில் ‘ஆபரேசன் சாகர்பந்து’ நடவடிக்கையின் கீழ், உடனடியாகப் பேரிடர் நிவாரண உதவிகளை இலங்கை மக்களுக்கு வழங்கியது. இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. உடனடியாக 9.5 டன்கள் நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டன.
இந்திய விமானப் படையின் 3 விமானங்கள் மூலம் 31.5 டன்கள் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இதில் கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாகச் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். சுகன்யா கப்பலில் மேலும் 12 டன்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை இலங்கைக்கு மொத்தம் 53 டன்கள் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற சேதக் ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய விமானப் படையின் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்கள் ஆகியவை இலங்கை விமானப் படையுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் எனப் பலர் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். டிட்வா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுடன், அது கொண்டு வந்த கனமழை இன்னும் சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!