வங்காளதேசத்தில் இந்திய விசா மையம் திடீர் மூடல்... விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி!
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் இயங்கி வரும் இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC) இன்று முதல் காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவின் ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் அமைந்துள்ள இந்த மையம், அந்நாட்டின் விசா சேவைகளுக்கான மிக முக்கியமான ஒருங்கிணைந்த மையமாகும். பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கு மத்தியில், டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தை போராட்டக்காரர்கள் அல்லது கிளர்ச்சியாளர்கள் சுற்றிவளைக்கத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து டெல்லியில் உள்ள வங்காளதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லாவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே தனது கவலையைத் தெரிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசா மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நேற்று விசா தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நேரம் (Appointment) ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, இந்தத் திடீர் மூடல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் மாற்றுத் தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் என்று மையம் தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் இந்தியத் தூதரகப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வரை இந்த விசா சேவைகளில் சில தடங்கல்கள் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!