ஈரான் குடியிருப்பின் மீது சராமாரி வான்வழித் தாக்குதல்... 13 பேர் பலி!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் போரில், ஈரான் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரானும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் அந்தப் பிராந்தியமே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளதால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் பொருளாதார நெருக்கடியால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஈரானுக்கு எதிரான இந்தப் போரை முடிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 25-ம் தேதி 15 அம்சத் திட்டத்தை வெளியிட்டார். "ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும், அணுசக்திப் பொருட்களைச் சர்வதேச முகமையிடம் ஒப்படைக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை அவர் விதித்திருந்தார். ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க ஈரான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், தற்போது ஈரானுக்கு இறுதி எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார். "நாளைக்குள் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரானுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கும்; அந்நாட்டின் மின் கட்டமைப்புகள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும்" என்று அவர் விடுத்துள்ள மிரட்டல் உலக நாடுகளைப் பதற வைத்துள்ளது. ட்ரம்பின் இந்த ஆவேசப் பேச்சுக்கு ஈரானும் தகுந்த பதிலடி கொடுப்போம் என முழங்கியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட கோர வான்வழித் தாக்குதலில் 13 பேர் உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்தியது அமெரிக்காவா அல்லது இஸ்ரேலா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற ஷரீஃப் பல்கலைக்கழகத்தைக் குறிவைத்தும் குண்டுமழை பொழியப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களால் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதுடன், எரிவாயு விநியோகமும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த மோதலால் அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக மடியும் அவலம் தொடர்வது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!