விஜய்க்குச் சட்ட நெருக்கடி? கரூர் வழக்கில் பிப்.12-ல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, திருச்சி நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர், இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகத் தீவிர விசாரணை நடத்தினர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் என சுமார் 400-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தவெக தலைவர் விஜய்யை இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அப்போதைய உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளிடமும் டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டது. திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்களின் பெயர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தச் சட்ட நடவடிக்கை விஜய்க்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது: விஜய் இன்னும் எந்தக் கூட்டணியையும் அறிவிக்காத நிலையில், அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவே இவ்வளவு அவசரமாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!