பெரும் சோகம்... விஷமாக மாறிய குடிநீர்... விருதுநகரில் 8 பேர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் குமராபுரம் கிராமத்தில், குடிநீரே உயிரைப் பறிக்கும் நஞ்சாக மாறியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தரமற்ற நிலத்தடி நீரால் ஒரே கிராமத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள குமராபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் கிராமத்தின் குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் வீடுகளுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தக் குடிநீரைப் பயன்படுத்திய 50-க்கும் மேற்பட்டோருக்குத் தீவிரமான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் தற்போது வாரந்தோறும் 'டயாலிசிஸ்' சிகிச்சையை நம்பி உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
சிறுநீரகப் பாதிப்பு முற்றிய நிலையில், இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இளைஞர்களும் அடங்குவர் என்பது கிராம மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கால்சியம் மற்றும் தாது உப்புகள் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலம் இந்த நீரைப் பருகியதால், உடலில் உப்புகள் தங்கி சிறுநீரகக் கற்களாக மாறி, இறுதியில் சிறுநீரகச் செயலிழப்பிற்கு வழிவகுத்துள்ளது.
தங்கள் ஊர் தண்ணீர் குடிக்கத் தகுதியற்றது என்பதைப் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், முறையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பொது சுகாதாரத்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அண்மையில் எடுத்த ஆய்வின்படி, இங்கிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரில் 'டி.டி.எஸ்' அளவு அபாயகரமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்திற்குத் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சுத்தமான காவிரி அல்லது தாமிரபரணி நீரை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக நிலத்தடி நீரில் கால்சியம் கார்பனேட் அதிகமிருந்தால் அதனை 'கடின நீர்' என்பார்கள். ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும் போது அது சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படும்போது படிகங்களாக மாறி கற்களை உருவாக்குகிறது. நீண்ட கால பாதிப்பு இதய வால்வுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இது போன்ற நீரை நேரடியாகப் பருகாமல், ஆர்.ஓ (RO) சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்துவது அல்லது அரசிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட கூட்டுக் குடிநீரைப் பெறுவது மட்டுமே தீர்வாகும். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள இன்றைய நாளில், ஜல் ஜீவன் போன்ற திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் இந்தச் சம்பவம் மூலம் மீண்டும் ஒருமுறை அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!