நாளை முதல் அனல் பறக்கும்!"... 4 டிகிரி வரை எகிறப்போகும் வெயில்... சென்னை டூ கன்னியாகுமரி வரை 'ஹாட்' அலர்ட்!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சூரியன் தனது விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டான். சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கப் போகிறது. வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த வெயில், திடீரென உயரப் போவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மதிய நேரங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதால், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெயில் ஒருபுறம் வாட்டினாலும், மலை மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. வரும் மார்ச் 28 முதல் மார்ச் 31 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட பகுதிகள்) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், மற்ற சமவெளிப் பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும்.
தலைநகர் சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். புறநகர்ப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று கூடுதலாக உணரப்படலாம். கோடை வெயிலைச் சமாளிக்கப் பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் பருகவும், பருத்தி ஆடைகளை அணியவும் மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!