மிசோராமில் பிரபல பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம்... சடலமாக மீட்பு!
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மிகவும் அறியப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் எஸ்ரெலா (41), தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அம்மாநில ஊடகத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் தலைநகர் ஐய்சால் பகுதியில் வசித்து வந்தவர் எஸ்ரெலா. இவர் நீண்ட காலமாகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வந்தவர். கடந்த ஜூலை மாதம் இவரது தாயார் காலமான நிலையில், அதன் பிறகு தனது வீட்டில் எஸ்ரெலா தனியாகவே வசித்து வந்துள்ளார்.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த டிசம்பர் 24ம் தேதி, மிசோராமில் பிரபல பெண் பத்திரிக்கையாளர் எஸ்ரெலாவைச் சந்திக்க உறவினர்கள் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் நீண்ட நேரம் கதவைத் தட்டியும், செல்போனில் அழைத்தும் எஸ்ரெலாவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, எஸ்ரெலா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐய்சால் நகர போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் ஏதுமில்லை எனத் தெரிகிறது. தாயாரின் மறைவுக்குப் பிறகு அவர் மன உளைச்சலில் இருந்தாரா அல்லது இது இயற்கையான மரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தடய அறிவியல் நிபுணர்களும் அவரது வீட்டில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மிசோரம் பத்திரிகையாளர் சங்கம் (MSJ) எஸ்ரெலாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. ஒரு துணிச்சலான மற்றும் நேர்மையான பத்திரிகையாளரை மாநிலம் இழந்துவிட்டதாகப் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!